Saturday, March 8, 2014

வாழ்வின் பரிணாமம் (தத்துவக் கவிதை)


வாழ்க்கை 
ஒரு துவைதத் துவக்கம்....

அது அத்வைதத்தின் 
அடக்கம்...

இரு துருவங்களின் 
துவந்த யுத்தம்....

இந்த யுத்தத்தின் 
முடிவில் முளைத்த 
ஒரு அத்வைதம்....

ஒன்றிலிருந்து ஒன்றாய் அரும்பிய 
இருவேறு பரிணாமங்களின் 
பரிமாற்றங்கள்...

இந்த பரிணாமம் 
பரிமாற்றதிற்கே..
பறிமாற்றம் 
பரிணாமத்திற்கே!!!

இதுவும் 
அத்வைதத்திலிருந்து 
துவைதமானது தான்!!!
மீண்டும் என்றோ ஒரு நாள்...
இரண்டாய் 
இருவேறு இயல்பாய்...
முரணாய்...
முடிவில்லா துருவமாகிவிட்ட 
இந்த துவைதத்துளி 
ஒன்றாகும்...
அடங்கிய அத்வைதம் 
ஆரம்பமாகும்....

முடங்கிய முடிவு துவங்கும்...
துவங்கிய முடிவு 
அடங்கும்.... - சௌந்தர்

பரிணாமத்தின் வித்தே.... (உலக மகளிர் தின சிறப்பு கவிதை)



ஒரு துளியினில் 
உயிராய்!!!
உயிரினில் உணர்வாய்- என்னை 
நிலையாய்,
நிறையாய்,
இருப்பாய்,
என் இருப்பின் சாட்சியாய்....
நீ நிறுத்தினாய்!!!

நீ ஒரு உலகம்....
உயிர்களை படைக்கும் 
இரண்டாம் உலகம்!!!

இறைக்கு சிறப்பில்லை...
இறையே சிறப்பு!!!
உனக்கும் சிறப்பில்லை...
நீயே இங்கு சிறப்பதினால்!!!


என்னுள் எழும் 
எழுத்துக்கள் 
பெண்ணால் ஆனவை!!!
உன்னால் ஆனவை!!!

வாழ்வின் 
துவந்தத் துவக்கத்தில்....
வாழ்வளித்தவள் நீ!!!

துவைதம் 
இல்லா 
காலங்களிலும்...
உயிர்கள் 
அத்வைதத்தின் 
ஆரம்பத்திலும்...
இருந்தது நீயே!!!
இங்கே இயக்கியது நீயே!!!
கொடுத்தது நீயே!!!

தாயே...
உன்னை 
பெண்ணென்று 
நான் அழைக்கிறேன்...
நீ பரிணாமத்தின் சாட்சி!!!

இந்த பசுமைக் கோளத்தில் 
பசுமையை,
உயிர்மையை, 
உசுப்பிவிட்டவள் நீ!!!

இன்று உன்னைப் போற்றுவது 
நீ பெண்ணென்பதால் 
மட்டுமல்ல....
நீ பெண்ணென்று மட்டும்  
உன்னை நான் போற்றினால்
பரிணாமத்தின் பகுதியை 
நான் விட்டுவிட்டவனாவேன்!!!!!!

நீ இங்கு பெண்ணாய்
இருப்பது ஒரு அடையாளம்....
எங்கள் 
வாழ்வின் பயணத்தின் அடையாளம்!!!
எங்கள் உயிரின் ஓட்டத்தின் அடையாளம்!!!

எங்கள் பரிணாமத்தின் சிசுவே..
உயிர்களின் உள்ளுறையே...
மனிதனின் .மறையே....
உன்னை வணங்குகிறேன்!!!      - சௌந்தர் 

Friday, March 7, 2014

கவிதைச் சிதறல்கள்!!!


காற்று 
சுவாசத்தை சுமப்பது போல்...
நான் 
உன் வாசத்தை சுமக்கிறேன்!!!

உனக்கு 
உவமை தேடும்போது - நான் 
ஊமையாகிவிடுகிறேன்....
நீ 
உவமையில்லா உவமை!!!

சாலைகள் 
சப்தமிட்டுச் செல்லும் 
வாகனங்களுக்காக மட்டும் 
சமைக்கப்பட்டதல்ல....
சப்தமிடாமல் செல்லும் 
ஒரு கவிதைக்காகவும் தான்!!!

உன்னால் 
என்னுள் 
படிந்து சென்றதை 
பத்திரமாக 
பதிவு செய்கிறேன் நான்!!! - சௌந்தர்

Thursday, March 6, 2014

கன்னியானவன் ...


விசும்பின் துளியொன்று 
பட்டுதெறிதிட்ட
எறும்புக் கூட்டமாய்....
என் மனதில்
கூடிகிடந்திட்ட எழுத்துக்கருவுலங்கள்
உன் நினைவுத்துளியொன்று
விழுந்தவுடன்
வேகமாய் கலைந்து
கவிதைகளாய் அரங்கேறுகின்றன
காகிதத்தில்!!!


நீ கிள்ளிவிட்டுச்சென்ற
என் இதயத்தில்
உன் நினைவென்னும் கைவிரல் சுவடுகள்
பதிந்திருப்பதை
நீ அறிந்திருப்பாயோ இல்லையோ என
பத்திரமாய் பதிவு செய்கிறேன்
நான்!!!


திருவாசகத்திலும் உருகாத
என் மனது- உன்
ஒரு வாசகத்தில் மட்டும்
உருகிவிட்டதோடன்று - இன்று
உருக்கிவிட்டும் இருக்கிறேன்
என்னையே - இங்கு
கவிதைகளாய்!!!


உன்
நினைவுத்தென்றலால் வருடப்பட்என் மனது- இன்று
உன் பிரிவுச்சுனாமியால்- அங்கு
சிதிலமடைந்திருக்கும் - என்
இதயக்கோட்டையை- நீ
மீண்டுமொருமுறை
பார்க்கவரவில்லைஎனினும் பரவாயில்லை
பாதிக்காமலாவது இரு...
பாவம் - என்
கவிதைப்பயணிகளாவது அங்கு
இளைப்பாறிக்கொள்ளட்டும்!!!


உணவுக்கு திண்டாடும்
ஏழைகளைப் போல- நான்
உணர்வுகளுக்கு திண்டாடுகிறேன்...
உணவு உயிரை வளர்கிறது!
ஆனால்
உன் உணர்வே
என் உயிரை இயக்குகின்றது!!!


உன்னைத்திட்டுவதற்கு - நான்
திருவுளம் கொள்கிறேன்- ஆனால்
தமிழ் மென்மை என்பதாலேயே
உனைத்திட்டும் வார்த்தை வன்மைகளை
அதற்கு புகட்ட வேண்டியிருகிறது!!!
நானும் தமிழும் ஒன்றுதான்!!!
இருவருமே
கன்னியாக!!!


அனால்
எனக்கோர் சந்தேகம் - தமிழ்
யாரைக் காதலித்தாள்? அவளும்
காலமெலாம்  வாழ்ந்துகொண்டிருகிறாள்
கன்னியாகவே
என்னை போல!!!   - சௌந்தர் 

இமைபொருந்தாமல்...

"என்புருகி இனவேல் நெடுங்கண்கள் இமை பொருந்தா பலநாளும் துன்ப கடல் புக்கு" - நாச்சியார் திருமொழி 

என் ஏக்கங்கள்
என்னுள்ளே தாக்கங்களாய்..
மோதி மோதி தெறித்த
அக்கினிக்குஞ்சுகள்
இன்று
நெருப்புப்பிழம்புகளாய்.....

என் எலும்புகளும்
உருக்கப்பட்டுவிட்டன- அவற்றினால்
இந்தக் காதல் நோய்
எனை
வடிவிழக்கச் செய்யினும்
பரவாயில்லை...
அவைகள் எனை
வலுவிழக்கவல்லவா செய்துவிட்டன!!!

நீயில்லாது...
நான்...
ஒரு இளம்துறவிபோல்
அணி துறந்ததுதான் நியாயமோ??!!

நீ
எங்குதான் இல்லை?...
எல்லாவற்றிலும் நினைவாக...
நீ
எங்குதான் இருகிறாய்??...
எல்லாவற்றிலும் கனவாக...
யாருக்கும் தெரியாமல்
உன்னை நானல்லவா வைத்திருக்கிறேன்!
என் கண்களின் நடுவே
பிம்பமாக!!!
நீயோ...
என் கண்களினுள்ளே
உருவாக மட்டுமல்லாமல்
உருத்தலுமாக!!!
நான்
கண் மூடித்தூங்கிவிட்டால்- நீ
காற்றுக்கு எங்கே போவாய்???
இத்துணை வருத்தத்திற்கு
எனை உள்ளாகிய
உனை நினைத்து
நான் அழுது- என்
கண்ணீரின் வெப்பத்தில் - நீ
கரைந்துவிட்டால்...
எனை உறங்கவும் விடாமல்...
உன் பிரிவால்
இறக்கவும் விடாமல்...
இப்படியோர் துன்பக்கடலுள்
நீச்சல் மறந்த மீனாய் - நான்
எனை ஆட்கொள்ள
நீ வருவாய் என்றே...
                             
                                 - சௌந்தர் 

தாயின் உணவும் குழந்தையின் பிறப்பும் (தாயும் சேயும்)


குழந்தை பிறப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. எத்துனையோ மருத்துவ தொழில்நுட்பங்கள் இருப்பினும், ஒரு கரு உருவாகி அது  இந்த மண்ணில் வந்து சேரும் வரை ஒரு பெண் பல விஷயங்களை துறக்க வேண்டியுள்ளது. அதனால்  தாய்மை என்பது மிகப்பெரும் பேராக கருதப்படுகிறது. உண்ணும் உணவிற்கும் குழந்தை பிறப்புக்கும் தொடர்பு உண்டா என்பது பலருடைய கேள்வி. முன்னாளில் கரு உண்டானதில் இருந்து, குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகும் வரை தாய் பத்தியம் இருப்பதும் குறிப்பிட்ட வகையான உணவுகளை தவிர்க்க வேண்டுவது நம் நாட்டில் இருந்துவருகின்றது. அண்மையில் லண்டன் கிங் கல்லுரியை சேர்ந்த பேராசிரியர் லூசில பாஸ்டன் மற்றும் அவருடன் உள்ள ஆய்வாளர்கள் தங்களது ஆராய்ச்சியில் குறைப்ரசவதிற்கும் தாய்மார்கள் உண்ணும் உணவிற்கும் மிகப்பெரும் தொடர்பு உள்ளதென்பதை வெளியிட்டுள்ளனர். ஒரு கரு உருவாகி 37 வாரங்களுக்கு முன்னதாகவே பிறந்து விட்டால் அதுவே குறை பிரசவம் என்பதாகும்.  தாயின் உணவிற்கும் குழந்தையின் பிறப்பிற்கும் உள்ள தொடர்பு பல காலமாக நம்பப்பட்டு வந்தாலும், இந்த ஆராய்ச்சியில் அது தெளிவாகிறது. இந்த ஆராய்ச்சியில் நார்வே நாட்டில்  (2002- 2008 வரை) உள்ள சுமார் 66,000 கர்பிணிப் பெண்களிடம் அவர்களின் உணவுப் பழக்கம் பற்றியும் குழந்தை பிறப்பு பற்றியும் தகவல் திரட்டப்பட்டது. இந்த ஆய்வில் அவர்களின் உணவுப் பழக்கம் முன்று வகையில் தொகுக்கப்பட்டது. இதில் காய்கறிகள், பழங்கள், எண்ணெய் பொருட்கள், தண்ணீர், முழு தனிய வகைகள், நார்சத்து நிறைத்த உணவு மற்றும் ரொட்டிகள் சாப்பிட்டு வந்த பெண்களில் குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் மிகவும் குறைவாகவும், மேலும் கிழங்கு வகைகள், மீன், சமைத்த காய்கறிகள், கொழுப்பு குறைந்த பால் வகைகள் எடுத்து கொண்டவர்களுக்கும் இந்த அபாயம் மிகக்குறைந்த அளவிலேயே இருந்ததாம். அதிகமாக உப்பு, இனிப்பு சேர்த்த உணவுகள், அதிகமாக என்னை சேர்த்த நொறுக்கு தீனி வகைகள், ஐஸ்க்ரீம் மற்றும் அதிகமாக மாமிசம் சேர்த்து கொண்டவர்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படும் நிலை மிகவும் அதிகமாக இருந்ததாம். இதனால் துரித உணவு வகைகள் மற்றும் நொறுக்கு தீனி வகைகள் கர்பிணிப்பெண்களுக்கு ஏற்றதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள்.  எனவே கர்பகாலத்தில் சத்து நிரந்த நல்ல உணவு வகைகளையே பெண்களுக்கு கொடுப்போம். 

Tuesday, February 4, 2014

படித்ததில் பிடித்தது.... உலகம் யாவையும்


இலங்கை ஜெயராஜ் அவர்களின்  "உலகம் யாவையும்" எனும் நூலில் வாசித்த குறிப்பை என் சொந்த மொழி நடையில் உங்களுக்காக.

தமிழரில் இலக்கியம் என்பது மிகச் சிறந்த ஒன்று... 
இலக்கு + இயம் = மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான இலக்கினை இயம்புவது (சொல்வது)
இதில் தலைசிறந்ததாக விளங்குவது இராம காதை என்னும் "கம்பராமாயணம்"
அறம், பொருள், இன்பம், வீடு இவை நான்குமே நமது காப்பியங்களிலும் இதிகாசங்களிலும் வலியுறுத்தபடுவன....
அறம் இருவகைப்படும் மூலஅறம் மற்றொன்று சார்புஅறம் 
மூலஅறம் என்பது எந்த நாட்டிற்க்கும் எந்த மக்களுக்கும் பொதுவானவையாகும்... மற்றையது இடம் கண்டு வேறுபாடும்..
கம்பன் கடவுள் வாழ்த்து எழுத தலைப்படும் போது அவன் சிந்தித்திருக்க வேண்டும்... உலகினை படைத்த இறைவனை நாம் பாடுங்கால் அது இறைவனை குறிக்க வேண்டும்.....
இறைவன் எத்தகைய தன்மையன் என்று கம்பர் ஆராய்ந்து இருகக்கூடும்... 
இறைவன் "உளவாதல்" "நிலைபெறுதல்" "நீங்குதல்" என்னும் தன்மை உடையவன் அதாவது உருவாகுதல், நிலைபெற்று பின்பு தன்னை ஒடுக்கி (அழித்து) கொள்பவன்....
இந்த மூன்று தன்மையில் இறைவனை நாம் இரண்டாவது நிலையில் அதாவது நிலைபெருதலில் தான் உணர முடியும் என்று கம்பர் எண்ணினார் போலும்... இந்த மூன்று நிலையினையும் விளக்கும் சொல் ஒன்று உள்ளது.... 
இந்த உலகம் தோன்ற ஆதி சப்தம் என்கிறது ஆன்மிகம் அறிவியலும் ஒலியிலிருந்து தான் இந்த உலகமும் தோன்றியிருக்க வேண்டும் என்கின்றனர்... அதை தான் நாம் ஓம்காரம் என்கிறோம்... ஓம் என்பது அகார (அ) உகார (உ) மகார (ம்) சேர்க்கை... அ + உ + ம் = அஉம் என்பதே ஓம் என்கிறோம்... இதில் ஆகாரம் என்பது ஆக்கம் (தோன்றல்), உகாரம் (நிலைபெறுதல்) மகாரம் (முடிதல்). நாம் அ எனும் போது சொல் பிறக்கின்றது... எல்லா சொற்களுக்கும் பிறப்பு அ தான் அதனால் தான் குழந்தை முதல் சொல்லாக அம்மா என சொல்கின்றது... உகாரம் என்பது நிலைபெறுதல்... ம் என்பது ஒரு சொல்லின் முடிவு... இதனால் தான் கம்பர் இறைவனின் நிலை பெறுதலை உணர்த்த உகாரத்தில் கடவுள் வாழ்த்தினை செய்கின்றார்.... 
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி வாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே! (கம்பர்)