Monday, July 25, 2016

யாரடி நீ மோகினி!!! - சிறுகதை


"பேய் இருக்கா? இல்லையா?" என்றான் கதிர். 
"இருக்கு டா"
"நீ எப்படி சொல்ற?"
"டேய், அது ஒரு சின்ன லாஜிக் தான் டா... இப்ப நீ கடவுளை நம்புறீயா இல்லையா?"
"இருக்காருன்னு நம்புறேன்..." கதிர் 
"கடவுள்னா, நமக்கு மேல இருக்கற ஒரு நல்ல சக்தி, நமக்கு மேல ஒரு நல்ல சக்தி இருக்கும் போது, தீய சக்தியும் இருக்கும் டா..."
"டேய் அப்படிப் பாத்தா கடவுளை யாரும் பாத்ததில்லையே"
"டேய் நீ கடவுள்னா  என்ன நெனச்ச?? கடவுள்ங்கிறது ஒரு உருவம் இல்ல, அது ஒரு இயக்கம், இந்த உலகத்தை நுட்பமா இயக்குற ஒரு தேர்ந்த இயக்கம் டா.. இந்த விநாயகர், முருகன் உருவம் எல்லாம் ஒரு தத்துவத்தையே, கருத்தையோ சொல்றது டா, அதனால தான் நம்ம அது உருவமற்ற அருவம்னு சொல்லற மாதிரி லிங்க வழிபாடு பண்றோம்"
"டேய் நீ என்ன சொல்ற, எனக்கு ஒன்னும் புரியல, அப்போ பேய்க்கும் இப்படி எல்லாம் ஏதாவது இருக்கா? அப்படீன்னா பேய்ங்கிறது என்ன?"
"இங்க பாரு கதிர், நீயும் ஒரு சைன்ஸ் ஸ்காலர் தான, உனக்கு தெரியும், இந்த உலகம் முழுதும் நிரம்பியிருக்கறது ஆற்றல்.. எனர்ஜினு சொல்லுவோம்.. ஒரு எனர்ஜிய நம்ம வேணுங்கிற மாதிரி மாத்திக்க முடியுங்கிறது தான் நவீன அறிவியல், எல்லா இடத்திலும் எனர்ஜி மட்டும் தான் இருக்கு."
"ம்ம்ம்..."
"இப்போ எத்தனையோ தொழிலநுட்பம் வெச்சு எனர்ஜிய ஒன்றிலிருந்து இன்னொன்னா நாம மாத்துறோம், இப்போ சூரிய வெளிச்சம் ஒரு வகையான எனர்ஜி, அதை நாம கரன்ட்டா மாத்துறோம்ல. கரண்ட்ட சத்தமா மாத்துறோம், ஆனால் அந்தகாலத்துல நம்ம முன்னோர்கள், முனிவர்களெல்லாம் அந்த ஆற்றல பல்வேறு யோக யுக்திகளின் மூலமா வசப்படுத்தியிருந்தாங்க"
"வசப்படுத்தறதுன்னா?"
"கட்டுப்படுத்தறதுனு அர்த்தம் டா கதிர், அந்தகாலத்துல நெறையா மந்திரங்கள், தாந்திரீக முறைகள் மூலமாகவும் இந்த சக்திகளை கட்டுப்படுத்த தெரிஞ்சிருந்தாங்க. உதாரணமா நாம மந்திரம் சொல்றோம்ல, அதுகூட திரும்ப திரும்ப சொல்லும்போது ஒரு அதிர்வா மாறும். அந்த அதிர்வு சேர சேர அது ஒரு சக்தியா மாறும். அந்த சக்தியை பல முறைகள்ல கட்டுப்படுத்தலாம், பல மூலிகைகள், யந்திரங்கள் இதெல்லாம் வெச்சு அந்த சக்திகளை அடையறது தான் பல மாந்திரீகர்கள் நோக்கமா இருந்துது. அதனால அவங்களால பல விஷயங்களை சாதிக்க முடியும்"
"டேய் இதெல்லாம் எப்படி டா சாத்தியம்? சைன்ஸ் படி ஒரு விஷயத்தை கண்ணால பாக்காம நம்ம எப்படி நம்புறது? அதுவும் இல்லாம நீ சொல்றது கேக்குறதுக்கு நல்லா இருக்கு, மத்தபடி.."
"டேய், இந்த ஏவல், பில்லி சூனியம் இந்த மாதிரி மாந்த்ரீகம் பத்தியெல்லாம் கேட்டிருக்கீயா  நீ?"
"கேள்விப்பட்டிருக்கேன்.."
"அதெல்லாம் என்னனு நீ நெனச்ச? பேய் பிசாசு பூதம் இதெல்லாம் ஒரு நெகட்டிவ் எனர்ஜி டா.. இந்த நல்ல எனர்ஜி கேட்ட எனர்ஜி ரெண்டையும் நம்ம வசப்படுத்தமுடியும், இந்தவகையான எனர்ஜிக்கு இந்த வகையான தன்மை இருக்கும்னு நெறைய இருக்குடா. நம்ம வீட்ல எல்லாம் கண்ணு பட்டிருச்சுன்னு சொல்லி சுத்தி போடுவாங்க பாத்திருக்கியா? 
"......."
"அது கூட ஒரு நெகட்டிவ் எனர்ஜி தான் டா... மத்தவங்க நம்மள பாத்து பொறாமைப்படும்போது, தப்பா நினைக்கும் போது, தவறா பேசும்போது நம்மள சுத்தி ஒரு நெகட்டிவ் எனர்ஜி இருக்கும் டா.. அதான் கண்ணுப்பட்டா குழந்தைங்க அழுதுட்டே இருக்கும்.
அதுவும் இல்லாம கை கால் வலி, உடம்பு வலி சோர்வுன்னு இருக்கும், இதெல்லாம் இந்த நெகட்டிவ் எனர்ஜியால தான்"
"டேய் நீ சொல்றத நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல..."
"இங்கபாருடா, நம்ம மதத்துல சர்வம் சக்தி மயம்னு சொல்றோமா இல்லையா, இன்றைய அறிவியலும் எல்லாம் எனர்ஜினு தான் சொல்லுது..."
"...."
"டேய் இதைப்பத்தியெல்லாம் அதர்வண வேதத்துல சொல்லியிருக்கு டா.. அதுவுமில்லாம நீ கந்த சஷ்டி கவசம் படிச்சிருக்கியா? அதுலயும் கொள்ளிவாய் பேய்களும்,குருளை பேய்களும், பெண்களைத்தொடரையும் ப்ரம்ம ராட்சசனும் அப்படீன்னு வருது"
"டேய் பேய்ல இத்தனை வகை இருக்கா??
"இது மட்டும் இல்லடா, கர்ணப்பிசாசு, யட்சிணி, மோகினினு நெறையா இருக்கு டா... நெறைய மாந்த்ரீகம் பண்றவங்க மந்திரங்களை உருப்போட்டு உருப்போட்டு இந்த தீய சக்திகளை வசியம் செய்வாங்க, இதுக்கு பல மூலிகைகள், பூஜைகள், யாகங்கள்னு இருக்கு..."
"யப்பா... டேய் என்னாடா இது... கேக்கவே பயங்கரமா இருக்கு.. அப்படி வசியம் பண்ணா என்ன செய்யலாம்?"
"உனக்கு என்ன நடக்கணும்னாலும் அந்த பேய ஏவி செய்துக்கலாம்.."
"அதென்னடா யட்சிணி?"
"அதுவா, அதுவும் ஒரு மாதிரி மோகினிப்பிசாசு தான். கல்யாணம் ஆகாம செத்துப்போன பொண்ணுங்க மோகினி, யட்சிணி னு மாறுவங்களாம்"
"டேய் போதும் டா... இதுக்கு மேல தாங்காது.. மணி பதினொன்னு முப்பது ஆகுது, நான் வேற லேப்ல தனியா வேலை பக்கவேண்டியிருக்கு, அதுவுமில்லாம இன்னைக்கு வெள்ளிக்கிழமை எங்க லேப்ல யாரும் இல்ல, ஊருக்கு போய்ட்டாங்க, இது வேற கட்டங்காடு"
"......"
"ஏற்கனவே எங்க பில்டிங் ஒரு பாழடைஞ்ச பங்களா மாதிரித்தான் இருக்கு, இதுல இங்க வேலை பாத்த ப்ரொபஸர் ஒருத்தர் வேற ரெண்டு வருஷம் முன்னாடி தான் செத்துப்போனாரு, இதெல்லாம் நெனைச்சாவே எனக்கு வயித்த கலக்குது. இதுல நீ வேற இன்னைக்கு இந்த பேய் பத்தின டீடைல்ஸ் கொடுத்திருக்க. போதும்ப்பா, நான் கிளம்புறேன்" என நடையைக் கட்டினான் கதிர்.
பல்கலைக்கழக சாலையில் மெதுவாக நடந்தவாறு தான் டிபார்ட்மென்ட் நோக்கி நகர்ந்தான்.
கும்மென்ற இருட்டு! அந்த இருட்டின் நிசப்தத்தை கிழிக்கும் சில்வண்டுகளின் சப்தம். மனித நடமாட்டமே இல்லாத நெடும் சாலை. இதெல்லாம் அவனை ஏதோ செய்தது. 
சரட்டென்று சாலையின் ஒருமுனையிலிருந்து மறுமுனையினை நோக்கி இரவின் அமைதியை கிழித்துக்கொண்டு ஒரு பொருள் பறந்து சென்றது.
டக்கென்று ஒரு கணம் அதிர்ந்தான் கதிர்.. 
அவன் இதயமே நின்றுவிட்டது...
அது என்னது தன்னைக் கடந்தது? 
அது என்னவென்று அறிய சாலையின் மறுமுனையினை அங்கு சூழ்ந்திருந்த இருட்டினில் உற்று நோக்கினான்.
ஒரு ஆந்தை.
"ச்ச்சீ... சனியன், இந்த நேரத்துல இதுவேற.." என தன் நடையினைத் தொடர்ந்தான். நடையினில் சற்று வேகம் கூடியது.
தூரத்தில் அவன் டிபார்ட்மென்ட் தெரிந்தது. விரைந்தான்.
அது வெள்ளைக்காரன் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழைய கட்டிடம், கதவுகள், படிக்கட்டுகள்,கைப்பிடிகள் எல்லாம் தேர்ந்த பர்மா தேக்கினால் செய்யப்பட்டது. மிகப்பெரும் கட்டிடம். உள்ளே சென்றுவிட்டால் எதுவும் தெரியாது. உட்புறம் நீண்ட வராண்டா. அறைகள் ஒன்றிற்கு ஒன்று எதிராக செய்யப்பட்டது. அந்த நீண்ட வராண்டாவிற்கு ஒரே ஒரு டியூப் லைட் வெளிச்சம் உமிழ்ந்துகொண்டிருந்தது.
அவ்வளவு பெரிய வராண்டாவிற்கும் ஒரு ஒரே ஒரு டியூப் லைட் போதாதோ என கதிருக்கு தோன்றியது. 
அவன் முதல் மாடியில் இருக்கும் தனது ஆய்வகத்திற்கு நடப்பது அவனுக்கே எதிரொலியாகக் கேட்டது. 
சற்று பயமிருந்தாலும், "ஆமாம், ரெண்டு வருஷமா இருக்கோம், இவ்வளவு நாள் வராத பேய் இன்னைக்கா வரப்போகுது? வந்தாலும் வாத்தியார் குடுத்த வேலையை பாதி பிரிச்சு குடுத்திருவோம், பயந்துட்டு போய்டும்" என நினைத்தவாறே தான் லேபை நெருங்கினான், லேப் திறந்திருந்தது.
உள்ளே அவன் ஜுனியர் ஆகாஷ் இருந்தான்.
"என்னடா இன்னும் ஹாஸ்டெல் போகலையா?"
"தோ கிளம்பிட்டேன் அண்ணா" என்றவாறு தான் லேப்டாப் எடுத்துவைத்துக் கொண்டிருந்தான்.
ஆகாஷ் பார்க்க சுமாரான பையன், எப்போதும் நெற்றியில் விபூதி வைத்திருப்பான். நிறைய கடவுள் பக்தி உள்ள ஒரு ரிசர்ச் ஸ்காலர். 
லேப் சற்று பழமையான தோற்றமுடைய ஒரு பெரிய அறை, கண்ணாடி குடுவைகள், கலர்கலராக நிறைய கெமிக்கல்கள். நிறைய அடைசல்கள். 
"நீங்க அண்ணா" என்றான் ஆகாஷ் 
"இல்லடா இன்னைக்கு கொஞ்சம் நெறையா வேலை, ஒரு முப்பது சாம்பிளுக்கு டய்ட்ரேஷன் போடணும், எப்படியும் காலைல மூணு இல்ல நாலு மணி ஆய்டும்"
"ஓகே குட் நைட் அண்ணா" என சொல்லிவிட்டு மறைந்தான் ஆகாஷ்.
மணி ஏறக்குறைய பன்னிரெண்டு ஆகிவிட்டதாக உணர்ந்தான் கதிர்.
என்ன தான் சமாதானம் செய்ய முயன்றாலும், கொஞ்ச நேரம் முன்பு நண்பனுடன் உரையாடிய பேய் உரையாடல் கண்முன்னே வந்து வந்து போனது. 
"ச்ச்சே, அப்படிலாம் ஒன்னும் இல்ல"
மீண்டும் ஒரு பயம் தன்னை அறியாமல் கவ்வியது. 
"சரி, கண்டதை யோசிக்காம வேலைய ஆரம்பிப்போம் என கண்ணாடிக்குடுவைகளை எடுத்து வைத்து தன் பணியினை செவ்வனே செய்யத் தொடங்கினான் கதிர்.
அப்போது அவன், நன்றாக மூக்கினை கூர்ந்து முகர்ந்து பார்த்தான். தனக்கு நேர்வது பிரமையா அல்லது உண்மையா என அவனால் நம்ப முடியவில்லை.
மீண்டும் தான் மூக்கினை கூறியதாகி முகர்ந்து பார்த்தான். 
"மல்லிகைப்பூ...."
"மல்லிகைப்பூ வாசம்..." தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான். 
"இங்க எப்படி மல்லிகைப்பூ வாசம்? நம்ம லேப்ல ஒரு பொண்ணுகூட இல்ல... இல்ல நாம அதீதமா கற்பனைபண்ணிக்குறோம்" என தான் கற்பனையிலிருந்து விலகுவதாக நினைத்து மறுபடியும் முகர்ந்து பார்த்தான்.
"ஐயையோ, வாசம் வருதே..." என திபுதிபுவென்று லேபை விட்டு வெளியே ஓடினான்.
"இங்க வாசம் அடிக்குதா?" என தான் மொத்த மோப்ப சக்தியும் பயன்படுத்தி முகர்ந்தான்.
"இங்க ஒன்னும் வாசம் வரலையே", மெதுவாக லேப் கண்ணாடிக்கதவை திறந்தான். வாசம் வருவதாகத் தெரியவில்லை. உள்ளே இன்னும் போனான். ஒரு பச்சை நிற பீரோ அதனருகில் அவன் வேலை செய்யும் மேசை.
மெதுவாக முகர்ந்தான்... "வாசம் வர மாதிரி இருக்கு" என தான் வேலையை செய்ய ஆயத்தம் ஆனான்.
சில நொடிகள் கடந்ததும் மல்லிகைப்பூ நெடி நாசியினை நெருடியது. அவன் இதயம் படபடத்தது. 
"ஒரு வேலை ஏதாவது பேயோ, மோகினியோ..." வேகமாக வெளியே நடந்தான். 
"காக்க காக்க கனகவேல் காக்க" என முணுமுணுத்தவாறு முகர்ந்தான். மல்லிகை நெடி.
"யாராவது வெளையாடுறாங்களோ?" என யாராவது இருப்பார்களோ எனும் சந்தேகத்தில் வராண்டா முழுவதும் தேடினான். 
"யாரும் இல்லையே.. அப்புறம் எப்படி?" "மாடில யாராவது?"
படிக்கட்டுகளில் ஏறி மேல் மொட்டை மாடிக்கு சென்றும் அங்கும் யாராவது இருக்கிறார்களா என தேடினான் கதிர். கும்மிருட்டு, அந்த இருட்டின் இசைவில் காற்றின் இழுப்புக்கு நெடும் மரங்கள், பேய் போல தலைவிரித்து ஆடுவதாக தோன்றியது கதிருக்கு. 
மேலே மேகக்குவியல்கள், அதனினூடேயே வவ்வால் கூட்டங்கள் பறந்தது கொஞ்சம் கிலி கொடுத்தது. 
தான் பில்டிங் சுற்றியும் அடர்ந்த மரங்கள் ஆடுவதும், இந்த சூழலும் வனாந்தரம் தன்னுள் இருப்பதாக தோன்றியது.
வெட்டார வெளியில் சுற்றியும் முற்றியும் பார்த்தான். ஏதும் உருவம் உதவுகிறதா? எதிரே வந்தால் என்ன செய்வது என பதைப்புடன் சுற்றினான்.
யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. 
"இல்ல இல்ல இது கற்பனை தான்... போய் ஒழுக்கமா வேலையை பாப்போம், கண்றாவி இனிமேல் இந்த பேய் சம்மந்தமா பேசவே கூடாது"
தான் லேபிற்கு வந்தான். வேலையை ஆரம்பிக்க எத்தனித்த போது மீண்டும் நாசியினைத் துளைத்தது மல்லிகை நெடி.
"ஐயோ கடவுளே எங்கிருந்து வருது இது?" லெப் சுற்றியும் பார்த்தான். எதுவுமிருப்பதாக தெரியவில்லை. மீண்டும் மீண்டும் நாசியினைக் கூர்மையாக்கி கொண்டு முகர்ந்தான். தனது மேசை அறைகள், மற்ற ஸ்காலர்களின்  மேசை அறைகள் என எல்லாம் திறந்து பார்த்தாயிற்று, மல்லிகை நெடி வருவது உறுதி. 
பிரமை என்றால் இவ்வளவு தொடர்ச்சியாக இருக்காது. 
"என்னமோ இருக்கு இங்க... ஆனா இவ்வளவு நாளா இப்படி ஒன்னும் நடக்கலேயே.." சொல்லவொண்ணா பயம் கதிரை சூழ்ந்தது.
அறையின் வெளிச்சத்திற்கு ஒரு வண்டு வந்து கண்ணாடிக்கதவில் மோதியது. அது கூட அவனை அதிரவைத்தது. 
"சரி,இனி இங்க இருக்கறது நல்லது இல்ல" 
"எதுவா இருந்தாலும் காலைல தான்... மேற்கொண்டு ஏதாவது நடந்தா நெஞ்சடைச்சு படுத்துட்டா நம்மள பார்ப்பதற்கு கூட ஆள் இல்ல, அப்படியே மூச்சு முட்டி போகவேண்டியது தான்" என கிளம்ப ஆயத்தம் ஆனான்.
எல்லா விளக்குகளையும் அனைத்து, கதவினை மூட பரபரத்தான். 
இன்னமும் இந்த மல்லிகைப்பூ நெடி வந்து கொண்டுதான் இருந்தது. 
வெளியே வந்தால் நெடி இல்லை. என்னென்னமோ யோசித்தும் பிடிபடவில்லை, அமானுஷ்யம், ஆன்மா, பேய், தீய சக்தி எல்லாம் உண்மை தானோ என்னவோ என வேகமாக வெளியேறினான். 
காலை பத்துமணி, கதவினைத் திறந்தான் கதிர். நாசியைக் குவித்து முகர்ந்தான். மல்லிகை நெடி இல்லை. ஒரே குழப்பம்.
என்னமோ, இனிமேல் நைட் வேலையே செய்யக்கூடாதுப்பா என நினைக்க ஆகாஷ் உள்ளே நுழைந்தான்.
"குட் மார்னிங் அண்ணா"
"குட் மார்னிங் டா..."
"வேலை முடிஞ்சுதா அண்ணா"
"இல்லடா நைட் கொஞ்சம் டையர்டு அதான் போய்ட்டேன், இனிமேல் தான் பாக்கணும்" என கதிர் சொல்வதை காதில் வாங்கிக்கொண்டே தனது லேப்டாப் பையை மேசை மீது வைத்தான். பிறகு மெதுவாக நடந்து அந்த பச்சை பீரோவிற்கு மேல் ஒரு நாற்காலி போட்டு ஏறினான். அதன் மேல் ஒரு சிவசக்தி படம், கீழிருந்து பார்த்தால் அப்படி ஒன்று இருப்பதே தெரியாது, ஏதோ ஒரு சாங்கியதிற்கு போல் அந்தப் படம் அங்கு இருந்தது. 
இரவு அதற்கு சூட்டப்பட்டிருந்த மல்லிகைச் சரத்தினைப் பிரித்தான்.
எதார்த்தமாக திரும்பிய கதிர் இதனைப் பார்த்து 
"டேய் நீ தான் நைட் மல்லிகைப்பூ போட்டதா?"
"ஆமாம் அண்ணா.. சும்மா ரூம்ல சாமி படத்துக்குப் போட வாங்கீட்டு வந்தேன், கொஞ்சம் இங்கையும் போட்டேன்"
"அடப்பாவி..."
"ஏன் அண்ணா?" என புரியாதவனாய் அப்பாவியாய் கேட்டான் ஆகாஷ்,
"ஒண்ணுமில்ல.. ரைட் விடு" என சிரித்தான் கதிர் தனக்கு மட்டுமே நடந்தவை புரிந்தவைகளாய்!!!