Tuesday, August 22, 2017

என் அகப்பொருளுக்கு!!!



என் 
முதற்பொருள்,
கருப்பொருள், 
உரிப்பொருளாகிவிட்ட என் 
அகப்பொருளுக்கு...

உன்னைக் கண்டபிறகு...
நீயே என்மொழியான பிறகு...

உன் நினைவுகளின் தழுவல்களின் 
தழும்பல்களில் 
என்னைத் தழுவிய தமிழும் 
அந்நியமாகிவிட்டாள்!

உன் காலடிநிலத்தின் வாசத்தில் 
வசப்பட்டுவிட்ட எனக்கு 
இன்றுதான் புரிந்தது 
மண்ணுக்கு வாசம் 
மழைப்புணர்வதால் அல்ல - உன் 
நடைபுணர்வதால் என்று!!!

இரவு முழுதும் 
உன் நினைவும் என் கனவும் 
கலப்பதில் 
பொழுதை போக்கிக்கொள்கிறேன்...
உன் காலடி நிலமும் 
உன் நினைவுப்பொழுதும் - என் 
முதற்பொருளென்பதால்!!!
உன் பார்வைகளின் பதியலில் 
காலமும் எனக்குச் சிறுபொழுதுதான்!!!

என் கதறலில் 
நீ செல்லும்போது 
கனம் கூடப் பெரும்பொழுதாகிவிடுகிறது!!!

என் மனநிலத்தில் 
உன் நினைவுச்சுனை - இங்கு 
கவிதை வெள்ளமாக!!!

நீயே தெய்வமாகிவிட்ட இடத்தில் 
தெய்வங்களுக்கென்ன வேலை??!!
என் கவிதைப்பண்கள் 
உன்னையே பாடுவதால்!!!

குறிஞ்சியாழோ விளரியாழோ 
வைத்து மீட்டவல்லாது  நான் 
என் விரல்களை - நீ 
பறித்துப்போனதினால்!!!

ஆனால் 
நான் இசையற்றவன் 
என நீ இயம்பிவிடாதே...
என் இசைக்கடவுளே நீதானெனும்போது!!!

'உன் தொழில் என்ன?' எனும் கேள்விகளுக்கு 
உன்னைக் காதலிப்பது என 
மறுத்தலிக்காமல் 
விடைவருகிறது எண்ணில்!!!

காதல் மலையின் மேல் 
நின்றுகொண்டிருக்கும் எனக்கு 
குறிஞ்சித்திணை பொருந்தும் தான்...
நித்தமும் உன் நினைவுகளில் 
புணர்ந்தாலும் அந்தப் 
புணர்தல் நிமித்தத்தாலும்!!!

நீ சென்றுவிட்ட பிறகு 
உனக்கென நான் 
நானாக அல்லாமல் 
இருந்துகொண்டு....
இருத்தலும் இருத்தல் நிமித்தமும் 
இருத்தலால்...
முல்லையே உனக்கென 
நான் பூண்டுகொண்ட முல்லைத்திணை!!!

என்னிடம் நீ கொண்டிருப்பது 
பிரிவல்ல - அது 
ஊடல்!!!
சிறுபிறை வாணுக்கணிபோல் 
இச்சிறுகுறை 
நம் காதலுக்கழகு!!!
என்னை ஊடியது 
உன் உடல்தான்!!!
நானும் நீயும்தான் 
உள்ளமொன்றாய் உறைந்துவிட்டோமே!
உடலிடை வந்த ஊடலுக்கு சாட்சியாக 
நானும் மருதத்திணையில்!!!

நீ கொடுத்துச்சென்ற மகிழ்வைவிட 
விடுத்துச்சென்ற 
துயரங்கள் அதிகம்!!!
உன் ஊடலால் 
நான் இங்கு ஏங்கிஇளைத்து 
இரங்குவது 
கடலலை போல் உன்நினைவு 
என் இதயமணற்பரப்பை 
தொடுவதில் 
உனக்கு நெய்தலாகிவிட்டேன்!!!

நீயே உயிராகிவிட்ட எனக்கு 
உயிரே பொருளாகிவிட்ட 
என் காதலுக்கு 
பாலைத்திணை வேண்டாம்!!!
அது தான் சொன்னேனே 
இது ஊடேலென்று...

என் உயிர்பிரிந்தாலும் 
உன் நினைவுபிரியாததை 
எந்தத் திணைகொண்டு நான் 
விளக்கமுடியும் 
விளிக்கமுடியும்.... - சௌந்தர் 

Thursday, April 6, 2017

எங்கே போகிறது இந்தப்பாதை!!!

ஒரு அடர்ந்தவனம், மிகவும் அடர்ந்தவனம். அதனுள் ஒரு பயணம். என்னுடன் ஒன்றாக நகரத்துள் பயணத்தினை தொடங்கியவர்கள் இன்று யாரும் என்னுடன் இல்லை. அவர்கள் ஒரு கட்டத்தில் அவரவர் பாதைகளைப் பகுத்து தேர்ந்தெடுத்துக்கொள்ள தலைப்பட்டு, தேர்ந்தெடுத்து நகர்ந்துவிட்டனர் என்றே உணர்கிறேன். இந்த வனம் அடர்ந்து, வெளியிலிருந்து பார்க்க வெளிச்சத்தின் சுவடுகள் இருப்பதாகக் கூட தெரியவில்லை. இங்கேயே இந்த வனத்திற்கு முன்னரே நான் தங்கிவிட்டால் என்னை கேள்விகேட்க ஒருவரும் இல்லை அனால், என் கேள்விகள் என்னைப்பற்றியே இருக்கின்றன. நான் எனக்கே கேள்விகளை கேட்டு பதிலும் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக உணர்கிறேன். வேறு எவரேனும் கேள்விகள் கேட்டால் நான் பொய்யுரைக்கலாம், ஆனால் எனக்கே எப்படி நான் பொய்யுரைப்பது? இன்றைக்கு இங்கே தங்கலாம், இன்னும் சில நாட்கள், வாரங்கள், மாதங்கள்  ஏன் சில வருடங்கள் கூட தங்கலாம் அனால் எப்படி ஜென்ம ஜென்மமாக, யுக யுகங்களாகத் தங்குவது? என்றாவது ஒருநாள் இந்த அடர்ந்த கானகத்தினைக் கடந்தே தீரவேண்டும். அது தான் முடிவு என்றபோது, இங்கே இருப்பதில் எந்த பயனும் இல்லை என்றே தோன்றுகிறது. நான் இந்தப்பயணத்தினைத் தொடங்கிய பொழுது, என்னுடன் பலரும் இருந்ததாக நினைவு. நிறைய பேருக்கு இந்தப்பயணம் செய்ய தேவைகள் இருந்து, வரும்வழிகளில் எங்கோ தங்கிவிடுவதில் ஒரு சுகம் ஏற்பட்டு பலபேர் ஆங்காங்கே இளைப்பாறவும், இன்னும் பலபேர் அங்கேயே இருந்துவிடவும் முடிவெடுத்தனர். இருந்தும், அது முடியாதது. என்றாவது ஒரு நாள் அவர்கள் அந்த இடத்தினையும் காலி செய்துகொண்டு இங்கே வரத்தான் வேண்டும். இந்த இடத்தின் சிறப்பே இங்கு யாரும் குழுவாக வரமுடியாது என்பதுதான். அப்படிவந்தாலும் இதற்கு மேல் குழுவாக பயணப்பட முடியாத வனம் இது. இன்னும் பலபேர் ஆரம்பத்தில் குழுவாக இருக்கப்பழகி, குழுவாகவே பயணமும் செய்து, குழுவாகவே இந்த கானகத்தினையும் கடக்க எண்ணுகின்றனர், அனால் இங்கே குழுவாக செல்ல இயலாது என்று அறிந்த பின்பு தனியாக செல்லத்தயங்கி இங்கேயே தங்குகின்றனர். எப்படி இருந்தாலும் ஒரு நாள் இங்கிருந்து தனியாகவே உள்ளே பயணப்படவேண்டியிருக்கும். அப்படி என்ன தான் இருக்கிறது இந்த வனத்தில்? முன்னே சென்றவர்கள் உள்ளே சூனியம் இருக்கிறது என்கிறார்கள், எதுவுமேயில்லாத ஒன்று இருக்கிறதாம். இல்லாததைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும் என்றும் நினைக்கலாம்... இருப்பதை எதிர்ப்பதோ, அறிவதோ என்பது எளிதாக இருக்கின்றது. ஸ்தூலத்தினை நோக்கிய இலக்கு எளிது, ஆனால் சூட்சுமம் நிறைந்த இலக்கு எங்கிருந்து வரக்கூடும் என்றே அறிவதற்கு வழியில்லை. கண்ட ஒன்றைப் பற்றி சொல்லுவதே கடினம் எனும்போது, காணாத ஒரு இலக்கு கற்பனை கூட செய்துபார்க்க முடியவில்லை. என்னுடன் சிலர் சேர்ந்து ஒரே வாகனத்தில் இந்த வனம் நோக்கி பயணிக்கத்துவங்கினோம். இன்னும் எனக்கு தெரிந்த சிலர் வேறு ஒரு வாகனத்தில் எங்களைக்காட்டிலும் வேகமாக பயணத்தினைத் தொடர்ந்தனர். இன்னும் சிலரோ வந்தடையவேண்டிய இலக்காண இந்த வனத்தினை மறந்து தங்கள் வாகனமே சிறந்தது என்று பிறருடன் வாதிட்டு, வன்மம் வளர்த்து, மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே சென்று மோதிக்கொண்டனர். அனால் இன்னும் சிலரோ வாகனத்தினை உதற வேண்டிய எல்லைவந்ததும் அதை உதறி வனம் நோக்கி தனியாக நடந்து, ஒன்றுமில்லா ஒன்றில் சென்று சேர்ந்துவிட்டனர். அப்படி சென்று சேர்த்தவரின் வழியினை இன்னும் சிலபேர் அழகாகப் பயன்படுத்தி அவர்களும் ஒன்றுமில்லா ஒன்றில் இந்த வனம் கடந்து ஒன்றிவிட்டனர். இன்னும் சிலர் ஒன்றியவர் கருத்துகளையும், அவர் வழியும் மறந்து ஒன்றுபடாமலே நான் ஒன்றியவன் என்று தம்பட்டம் அடித்து பலருக்கு வழிகாட்டுகிறேன் என்று வழிமாற்றிவிட்டுவிடுகிறார்கள். இந்தப்பயணத்தினை புதிதாக ஆரம்பிக்கும் பலரும் இந்த ஒன்றுமில்லாத ஒன்றுகளிடம் மாட்டிக்கொள்கின்றனர். இவர் தங்களை கால் நோகாது, கை நோகாது வனம் தண்டி அழைத்து செல்வர் என்றே நம்புகின்றனர். அனால் உண்மையில் இந்த வனத்திற்குள் எவர் தயவும் எடுபடாது. தனிப்பயணம் தான் ஒரே வழி. காலாற நடக்கத்தெரிந்தவருக்கே இந்த கானகம் வழி கொடுக்கும். நானும் நான் வந்த வாகனத்தினை விட்டுவிட்டு வந்தேன், இங்கு அது பயன்படாது, என் கால்கள் மட்டுமே துணை. நான் பயணப்படும் முன்னர் என்னை பலரும் விகாரமாக பார்த்தனர். இன்னும் கொஞ்சகாலம் கழித்து போகலாம்... இப்போதென்ன அவசியம் என்றனர், அனால் அவர்கள் எல்லோரும் பலகாலம் அங்கேயே அப்படி சொல்லிக்கொண்டே இருக்கின்றனர் என்பது பின்னரே எனக்கு புரிந்தது. இன்னும் என் நெருங்கிய உறவுகள் எனும் மனிதர்கள் தங்களை விட்டு நான் செல்வது பெரும் துயர்போல அரற்றினார்கள், நான் புறப்பட்டு ஓரிரு நாட்கள் துக்கம் மேலிட்டதாய் இருந்தார்கள் அனால் மூன்றாவது நாள்முதல் அவர்கள் மீண்டும் தங்கள் அலுவலுக்கு திரும்பியிருந்தார். என் இலக்கு பயணப்படுவது என்று எவ்வளவு தூரம் சொல்லியும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, பின்னர் அவர்களை எப்படி சமாதானம் செய்தாலும் அவர்கள் ஏற்கும் மனப்பக்குவதில் இல்லை என்று, என் காலம் தாழ்த்தாது என் பயணத்தினைத் தொடங்கினேன். என் பெயர், பதவி, பட்டம் எனும் இத்தியாதிகள் நான் பயணப்படும் தொடக்கத்தில் இருந்தது, இன்று அவை எல்லாம் அர்த்தமற்றவையாக என்னிலிருந்து கழன்று நகர்ந்துவிட்டன. இன்னும் நான் எனும் ஒன்று என் தோளின் மீது சற்று சுமையாய் இருக்கிறது, அதையும் இந்த கானகம் கடக்கும்போது எங்கேனும் கழற்றி வைத்துவிட்டு நடக்கவேண்டும். கொஞ்சம் பயமும், பதட்டமும், என்னுடன் பயணத்தினைத் தொடங்கியவர்கள் நினைவுகளும் இன்னும் எனக்குள் இருக்கின்றன, அனால் இந்த கானகம் கடக்கும்போது அந்தச்சுமைகளும் கழற்றி வைத்துவிடவேண்டும். அவைகளை சுமக்க சுமக்க இந்த கானகத்தின் பாதையும் நீண்டுகொண்டே போகுமாம். எவ்வளவு விரைவில் அவற்றினை இறக்கிவைக்க வேண்டுமோ அவ்வளவு விரைவில் அதனை நான் செய்துவிடவேண்டும் என்று புரிகிறது. இந்த நெடும் காட்டில் என் முதல் அடியிணை இப்போது வைக்கிறேன், விரைவில் இந்த கானகம் கடந்து ஒன்றுமில்லா ஒன்றில் ஒன்றிவிடப்போகிறேன். - சௌந்தர் 

Saturday, February 11, 2017

கண்ணனுக்கு ராதையின் கவிதை மடல்



அன்புக் கண்ணா...
என் கண்ணீர்கசிவுகளினூடே 
இந்தக் கவிதை!

உன்னால் ஸ்பரிசிக்கப்பட்ட ராதை 
உனக்காக எழுதுவது!!!

உன் நீலநிறமேனியில் 
என் கண்களின் கருமை 
அப்பியிருந்தது - இன்று 
அழிந்துவிட்டதா?

உன் பாதங்களின் தூசுகளில்கூட 
என் இதழ்களின் தடங்கள்  
பதிந்திருந்ததை என்னவென்று சொல்லுவேன்....??!!

ஆடைஇழந்த என்னை 
அள்ளியொரு பூப்போல- நீ 
அணிந்துகொண்ட நாட்கள் 
என்னிலிருந்து நகரமறுக்கின்றன!!!

கண்மூடி என்மீதுறங்கிய 
உன்னை
ஒரு குழந்தையாய் குவித்து - உன் 
தூக்கம் கலையாது 
முத்தமிட்ட நாட்கள் 
நகரமறுக்கின்றன!!!

கள்வனென்று சகலரும் - உன்னை 
சொன்னபோதும் - என் 
கண்கள் உனக்கு காவலாகின...

ஒற்றைசடையில் 
கற்றையாய் உன்னை 
உடுத்திக்கொண்ட என்னை 
அந்த பிருந்தாவனத்தில் 
மண்துகள்கள்கூட மறக்கவில்லை!!!

அன்று 
நீ தழுவிய 
தடங்கள்...
இதுவே..
இதனுடனேயே 
நாம் இணைந்திருந்த 
இந்த மண்ணினோடும்...
மழையினோடும் 

அதிகாலையில் 
நீ தழுவியத்தைக்கண்டு 
அகவிய மயில்களோடும்...
நம் இணக்கம்கண்டு 
கூவிய குயில்களோடும் 
இருந்துவிடுகிறேன்....

இவள் 
உன் ராதை....
- சௌந்தர் 

Monday, February 6, 2017

என்தோள் படர்ந்த உன் தொடர்பு!!! - சௌந்தர்



கதிரவன் தன்கைகளை சுருட்டிக்கொண்டு 
காரிருள்தனை கவிழ்த்துவிடும் வேலை...

இரைதேடப் பரவிய புள்ளினங்கள் - தன் 
இனத்துடன் இணங்கிடும் வேலை...

மதங்கொண்ட ஒற்றைக்களிறு பசிபெருகி 
கருப்புக்கொள்ளையதனில் புகுந்தநொடி...

ஒற்றை நிலவின் வெளிச்சமும் 
வெளிகளின் வேலிகள்கூட நம்மை 
துளைக்கவொண்ணா இணைக்கமது!!!

என்னடர்ந்த தோள்மீதுனது கற்றைக்குழல் 
படர்ந்திருந்தது இரவின்  இனிமையினை 
இன்னுமொருமுறை சொல்லியது!!!

ஆளுமைக்காகவே படைக்கப்பட்டது ஆண்மை 
எனும் ஆதிக்கஆகமங்கள் அழிந்து...
அன்பினை ஆளுவதே ஆண்மையெனும் 
ஒரு புதியஆத்திச்சூடி புரிந்தது!!!

இன்று என் தனிமைகளில்கூட
என்தோள் தழுவிய உன்கைகளும் 
கற்றைக்குழலும் கண்ணீர்துளிகளும் 
படருவதாய்ப் படுகிறதடி!!!  - சௌந்தர் 

Thursday, November 24, 2016

அம்மா சொல்லட்டும்னு காத்திருக்கோம்!!! சிறுகதை

"அப்போ முடிவா  நீ என்ன தான் சொல்ற?.."
"எனக்கு முப்பதுக்கு மேல கல்யாணம் பண்ணா போதும்னு ஜாதகத்துல இருக்கு, அதுக்காக நீங்க இன்னும் மூணு வருஷம் காத்திருப்பீங்க, அதுக்குள்ள என் மனசு மாறும்னு நீங்க நெனைக்கலாம் ஆனா, அவ வீட்ல எப்படி காத்திருப்பாங்க?"
"......."
அவளுக்கும் என் வயசுல ஒரு அண்ணன் இருக்கான், அவன அவங்க பாக்குறாங்க"
"சரி.. இப்போ அதுக்கு"
"ஒண்ணுமில்ல, ஆனா ரொம்ப நாள் காத்திருக்க முடியாது...
இன்னும் ஒரு அஞ்சு மாசம், அப்புறம்..."
"அப்புறம்..."
"அப்புறம் நானே எதாவது முடிவெடுக்க வேண்டியதுதான்..."
"அப்படின்னா... நீ தனியா பொய் கல்யாணம் பண்ணிக்குவா?"
":.........."
"அப்போ... நீ எங்கள விட்டு போய்டுவ..."
"........"
"உனக்கு நானும் அப்பாவும் வேண்டாம்?"
"வேண்டாம்னா நான் ஏன் இத்தனை நாள் உங்ககிட்ட இப்படி கேட்டுட்டு இருப்பேன்..."
"இப்போ நீதானே சொன்ன, வேறமுடிவு எடுப்பேன்னு... நீ சம்பாரிக்குற... உன் முடிவை நீ எடுக்கலாம்"
"அம்மா ஏன் மா புரிஞ்சிக்கமாட்டேங்கற...?"
"இல்ல டா.. உனக்கு நாங்க முக்கியமில்லன்னு தெரிஞ்சிருச்சு, வேற என்ன செய்ய சொல்ற?"
"அம்மா, நீங்க  வாழ்ந்துமுடிச்சிட்டீங்க, எனக்கு இன்னும் ஐம்பது வருஷ வாழ்க்கை இருக்கு..."
"அது செரிப்படாது டா..."
"இப்போ என்ன விட சொல்றீயா? இல்ல அவளை விட்ருவேன்னு நெனச்சியா?? இல்லம்மா...என்னால முடியாது"
"சரி... நான் காலைல பேசறேன்... விடு..." அந்தப்பக்கம் போன் வைக்கப்பட்டது.
என்ன செய்வதென்று புரியாதவனாய், யோசித்தவாறே கெளதம் படுக்கையில் சாய்ந்து மீண்டும் யோசித்தான்.
எட்டு வருட காதல், பல்வேறு சண்டைகள், கோபங்கள், உணர்வுகள், பகிர்வுகள் என எத்துணை விஷயங்களைக் கடந்து இந்தக்காதல் எல்லாவற்றிற்கும் மேலான நட்பாகிப்போனது. ஆரம்பத்தில் திவ்யா சின்னச்சின்ன விஷயங்களைக் கூட அதிகமாக எதிர்பார்ப்பாள். என்னைவிட, என் காதலைவிட நான் பெரிதும் நேசிப்பது என் நட்பு, மனோ. ஒரு நாள் திவ்யா என்னிடம், "உங்களுக்கு மனோ பெருசா நான் பெருசா?"
டக்கென்று நான், "மனோ தான்.."
அவள் முகம் சுருங்கியது, "அப்போ நான் இல்லையா?" அழவே ஆரம்பித்துவிட்டாள்.
சமாதானம் செய்து அவளிடம், "இங்க பாரு, இன்னைக்கு நான் நானா இருக்கேன்னா, இந்த நிலைமைக்கு, என் வாழ்க்கைக்கு எல்லாம் மனோ மட்டும் தான். அவன் இல்லனா நான் ஒண்ணுமே இல்ல.. இன்னைக்கு நீ பாக்குற கௌதம் மனோவால வந்தவன்.. அத புரிஞ்சுக்கோ.. இப்போ சொல்லு, என்னக்கு யாரு மொதல்ல இருக்கணும்னு?"
கண்களை கசக்கிக்கொண்டே "மனோ அண்ணா தான்" என்றால் முகத்தை கோணலாக வைத்துக்கொண்டு. நான் சிரித்தபடியே அவள் முகத்தினை கைகளோடு என் நெஞ்சின் மீது இழுத்து அணைத்துக்கொண்டு..
"லூசு" என்றேன்.
அன்றிலிருந்து மனோ அவளுக்கு உண்மையான அண்ணணாகிப்போனான். அவனை திட்டினால்அவளிடமும், அவளைதிட்டினால் அவளிடமும் இடையறாது திட்டு வாங்குவது எனக்கு பழக்கமாகி போய்விட்டது. அதுவும் ஒரு சுகமாகிப்போனது. என்னை நேசிப்பதென்பது என்னை மட்டுமல்லாது, என்னை சார்ந்த உறவுகளையும், நட்புகளையும் மதிக்கும் தன்மையினை அவள் வளர்த்துக்கொண்டாள். என்னை புரிந்து, என்னைப் புரிந்தவர்களையும் நேசிக்கும் ஒரு நேசம் எனக்கு இடையறாது கிடைத்தது. அன்றிலிருந்து எங்கள் காதல் ஒரு அழகான நட்பாய் மலர்ந்தது. எவ்வளவு சண்டைகள் வந்தாலும் ஒருவரைவிட்டு ஒருவர் அகலாத தன்மை சேர்ந்துவிட்டது. எட்டு வயதாகிப்போனது எங்கள் காதலுக்கு. கல்லூரிக்காலங்களில் ஒரு சிறு அரும்பாக இருந்த உணர்வு, அந்த காதல் இன்று ஒரு கனகமெங்கும் நிறைத்திருக்கும் ஒரு காட்டுப்பூவாய் பரவி நிற்கிறது. அவள் ஒரு கண்ணாடி போல ஒரு கட்டத்தில் என்னைப் பிரதிபலிக்க ஆரம்பித்துவிட்டாள். நான் சிரித்தாள் அவளும், அழுதாள் அவளும், தன்னை என்னுடையதாக்கிவிட்டாள். எனக்கு இன்னும் நான் அவளின் மேல் கொண்ட அன்பு குறைவோ எனும் எண்ணமே அவளின் அன்பினைப்பார்க்கும் பொழுது தோன்றுகிறது. 
"நானென்ன அவ்வளவு பெருசா? என்னையே பெரிய உலகஅதிசயம் மாதிரி என் இவ்வளவு நேசிக்குற" நான் கேட்கும்போது விழிவிரித்து கூர்மையாக என்னைப் பார்த்து மெதுவாக தலை ஆடுவாள். அதற்கு ஒவ்வொரு முறையும் நான் ஒவ்வொரு அர்த்தம் கொள்ளவேண்டியிருக்கும். நட்பாகிப்போன ஒரு காதல், அனால் இரு வீடுகளும் கடுமையாக எதிர்க்கின்றன. என்னை மிகவும் புரிந்துகொண்ட அம்மாவும் அதே தீர்மானத்தில் தெளிவாக இருந்தாள். இதெல்லாம் மனதில் கண நேரத்தில் ஓடிக்கொண்டிருக்க, மீண்டும் அலைபேசி ஒலித்தது. அம்மா...
"சொல்லுமா..."
"சரி உன் முடிவை நீ சொல்லீட்டே... என் முடிவு..."
"........."
"இது தான் நான் கடைசீயா உன்கிட்ட பேசுறது..."
"ஏன் மா இப்படி பேசுற?"
"இல்ல கௌதம், நான் பழகிக்கணும்... நீ இல்லாம வாழ பழகிக்கணும்... ஒரே பையன் நீ, நீயும் எங்களுக்கு இல்லனு ஆயிட்டே.. இனி நான் தனி தான்..."
"மா..."
"அவளோதான்... இனி நான் பேச மாட்டேன்..." போன் வைக்கப்பட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. சரி அடிக்கடி அம்மாவிடம் சண்டை போடுவது சகஜம் தான், காலையில் பேசிக்கலாம் என்று பல சிந்தனைகளில் தூங்கப்போய்விட்டேன். 
அம்மா... என் வாழ்க்கைக்கு மிகப்பெரும் நம்பிக்கை தந்தவள். திவ்யாவை நான் நேசிக்க ஆரம்பித்த மூன்றாவது நாள் அம்மாவிடம் சொல்லிவிட்டேன். பள்ளிப்பருவ கைகூடாக் காதல் கூட ஒருமுறை அம்மா மடியில் துவண்டு புரண்டு அழ என்னை மறுபடியும் பழைய நிலைக்கு திருப்பினாள். எத்துணை காதல் கவிதைகள், காதல் படங்கள், நாவல்கள், அத்தனையும் அம்மாவுடன் சமையலறையில் நடந்துகொண்டே விவாதித்திருப்பேன். காதல் என்றால் என்ன, பெண் யார் எல்லாம் அம்மா கற்று தந்த பாடம்.  
ஒரு நாள் நடுசாமம், அம்மாவுடன் ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டிருக்கும் போது,
"ஏம்மா... நீ போய்ட்டா என்னக்கு யாரும்மா... யாருகிட்டமா நான் இந்த மாதிரி பேசுவேன், இன்னொருத்தங்க உன்னமாதிரி என்ன புரிஞ்சிக்குவாங்களா? நான் அனாதையாய்டுவேன்ல மா" கண்ணீர் தழும்ப அழுதேன் நான்.
"அப்படிலாம் இல்லடா கண்ணா.. நான் இல்லன்னா யாராவது அந்த இடத்துக்கு வந்துருவாங்க.. இந்த உலகம் அப்படித்தான், யாரோ ஒருத்தங்க நமக்காக இருப்பாங்க. யாரும் இல்லாம போக மாட்டாங்க, உன்ன புரிஞ்சுக்கற மாதிரி ஒருத்தங்க இருப்பாங்க" என்றாள். இருந்தும் அம்மா இல்லையென்றால் என் வாழ்வில் வரும் வெறுமை பற்றி யோசித்தேன். எனக்கு வாழ்க்கையை மிக அழகாக புரியவைத்தவள் அம்மா. அப்பா அன்பானவர் தான், அனால் பெரிதும் அவர் தாக்கம் என்னுள் ஏனோ பெரிதும் எழவில்லை. 
எனக்கு வேலை சென்னையில், பத்து மணிக்கு ஆபீஸ், ஏழு எட்டு ஆகிவிடும் வேலை முடிய, காலை உணவிற்கு முன்பொருமுறை, பின்பொருமுறை, மதிய உணவிற்கு முன்பொருமுறை, பின்பொருமுறை, இடையில் காபி சாப்பிடும் போது, சாலையில் நடக்கும் பொது, இரவு உணவு முடித்து ஒரு பெரும் நேரம் என அம்மா, அம்மா, அம்மா.. அவள் குரல். அருகாமை. 
என்னைக் கடந்து செல்லும் நண்பர்களெல்லாம் "என்ன ஜீ.. ஒரே போன் தான்.. எப்பவுமே.... ம்ம்ம்... நடத்துங்க..."
"எங்க நீங்க வேற, வீட்ல பேசுறேங்க.."
"வீட்லன்னா ... அவங்க கிட்டயா.."
"யோவ்... என் அம்மாகிட்ட பேசுறேன் யா... இந்தா நம்பர் பாக்குறீயா?" என்றால் நம்பிக்கை இல்லாமல் கண் சிமிட்டி செல்வார்கள். 
என்னுடைய தோழி போல், ஆசிரியர் போல், வழிகாட்டி போல் எல்லாம். இப்படி இருக்கும் அம்மா எப்படியும் எங்கள் காதலை ஏற்றுக்கொள்வாள் எனும் பெரும் நம்பிக்கை வைத்தது தான் இன்று பிசகாய் போய்விட்டது. அம்மா தலையசைத்தால், அப்பாவும் சம்மதிப்பார் என நினைத்து இருந்தது பெரும் பிழையாகிவிட்டது. வீட்டின் அரவணைப்பிலேயே இருந்துவிட்டு, இன்று ஒரு பெண்ணுக்காக வீட்டினை புறந்தள்ள நினைப்பது மிகுந்த வேதனை தான். ஆனால் சொந்தங்களுக்காக, சாதி சனங்களுக்காக என் வாழ்க்கையினை அடகு வைக்க வேண்டுமா? இன்னொரு பெண் வந்து என்னைப்புரிந்துகொண்டு என்னால் சுமுமாகமாக வாழ முடியுமா என்பதெல்லாம் யோசித்து யோசித்து, பின்னர் தான் சுயமாக வாழத்தலைப்பட்ட நினைத்தது. காதல் ஆரம்பத்தில் மிகப்பெரும் போதையாக, மகிழ்ச்சியாக இருந்தது, இருக்கிறது தான், அனால் இந்த சமூகம் இன்னும் காதலை ஒரு அங்கமாக பார்க்கப்பழக்கவில்லையோ என்று தான் தோன்றுகிறது. எத்துணை காதல் கதைகளைக் கொண்ட திரைப்படங்கள், இதுநாள் காதல் நாவல்கள், இருந்து ஏன் இத்துணை விஷயங்கள் காதலுக்காக என நினைத்தபோது ஒன்று மட்டும் புரிந்தது, இங்கு நாம் நமக்காக வாழவில்லை, யாரோ ஒருவர் சொல்லுக்காகவே வாழ்நாள் முழுதையும் அடகுவைக்கும் மடமை நம் சமூகத்தில் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆழ்மனத்திற்குள் இங்கு ஒவ்வொருவருக்கும் காதலிக்கும் வேட்கை, தீராத வேட்கை, அனால் அது இந்த சமூகக்கோட்பாடுகளுக்குள் சிக்காது ஆழ்மனதிலேயே புதைந்துவிடுகிறதாய் எனக்கு தோன்றியது. 
காதலைப்பற்றி, எத்துணையோ காதல் கவிதைகளை நான் எழுதும்போது, என்னை ஏற்றுக்கொண்ட அம்மா இன்று அது நடைமுறைக்கு வரும்போது விலக்க முற்படுவது எனக்கு முரணாய்பட்டது. எனக்கு நீ வேண்டாம் என எப்படி ஒருசில நொடிகளில் முடிவெடுத்து, "நீதாண்டா எனக்கு" என சொல்லிய அம்மா இன்று நீ வேண்டாம் போ என மறுத்தது எனக்கு புரியவில்லை. காதலும் அன்பும் எல்லைகளற்றது என்றால், நான் நேசிக்கும் ஒரு பெண் எப்படி நீங்கள் வகுத்துக்கொண்ட வாழ்வியல், சமூகவியல் எல்லைகளுக்குள் வரமுடியும். என் வாழ்வின் எல்லைகளை நானே முடிவு செய்யவேண்டும் என்பதில் தவறு உள்ளதோ? அல்லது என்னை அன்பால் சிறை செய்து மீட்க நினைக்கிறாளா? அனால் எனக்கு அம்மாவைப் பற்றி நன்கு தெரியும், அவள் முடிவின் தீர்க்கம் நானறிவேன். எத்துணை தத்துவங்கள் பேசிய அம்மா இன்று அவைகளை புறந்தள்ளி, என்னையும் புறந்தள்ள துணிந்துவிட்டது என்னால் இன்னும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. காலையில் அழைத்தாயிற்று, மாலையில், முதல்நாள், இரண்டாம் நாள் என ஒரு வாரம். அம்மா அழைப்பை எடுக்கவில்லை. கட் செய்தாள். அலுவலகத்தில் விடுமுறை கிடைப்பது இந்த மாதம் குதிரைக்கொம்பு. 
அருகில் உள்ள நண்பன் மூலமாக, அம்மா பற்றி யாரோ ஒருவர் போல் விசாரித்துக்கொள்ள தான் முடிந்தது... அதற்குள் மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. 
திவ்யாவிடம் இதுபற்றி சொல்லவேயில்லை. அம்மாவுக்கும் எனக்கும் உள்ள பிணைப்பு அவளுக்கு தெரியும், சொல்லி குற்ற உணர்வில் அவளை தத்தளிக்கவைக்க  விருப்பமில்லை. ஒரு நாளைக்கு பத்து முறைக்கு மேல் வரும் அம்மாவின் அழைப்பின்றி என் வாழ்வும் வெறுமையாக உணர்ந்தேன். மனோ வேறு மாநிலத்தில், அலுவல் சுமை, வாரமொருமுறை அழைத்து அளவளாவுவதே மிகப்பெரும் விஷயமாகிவிட்டது. ஊரைவிட்டு வேறொரு இடத்தில் நம்மைக் கேட்கக்கூட நதியில்லா ஒரு சூழலில், அலைபேசி எத்துணை பெரிய வருமென்று ஒரு காலத்தில் உணர்ந்திருந்தேன் அனால் இன்று அதே அலைபேசி யாரும் அழைக்க ஆளில்லாது அநாதை போல் இருந்தது. ஒரு ஆண் எல்லா உறவுகளில் இருந்தும் எளிதில் மீண்டு விடுவான் அனால் அம்மா, மனைவி இது இரண்டும் அவனுக்கு மீள முடியாதது. இரண்டும் ஒரு பெரும் நட்பாய் அமைகிறபோது அவன் அதற்கு அடிமையாகவே ஆகிப்போகிறான். இரண்டும் எதிரெதிர் துருவங்களாகி நின்று விடுகின்ற போது ஒரு ஆணின் வாழ்க்கை நரகமாகிப்போகிறது அதே இரண்டும் ஒரே துருவத்தில் நிற்கின்றபோது அவனைப்போல ஒரு பலம் பொருந்தியவன் இருக்கவே முடியாது, அவனால் செய்யமுடியாது எதுவுமில்லை. ஆண் தசை பலத்தினை மட்டுமே நம்புபவன் அல்ல, வாழ்வில் வெற்றிபெறத்துடிக்கும் ஒவ்வொரு ஆணும் ஏங்குவது மனோபலத்திற்குத்தான். அம்மாவையும், திவ்யாவையுமொரு துருவமாக்கிடத்தான் நான் பெரிதும் ஆசைப்பட்டேன். என்னைப் போல எல்லா ஆண்களும் அதைத்தான் ஆசைப்படுவார்கள் என்று தோன்றியது. யாரோ ஒருவர் நம்மை நினைத்திருக்கிறார்கள் என்பது வாழ்க்கைக்கு மிகப்பெரும் பலம். மரணமென்பது நம் உடலால் அழிவதில்லை, யாரோ உள்ளத்திலிருந்து நம்மை எடுத்துவிடும்போது அங்கு நமக்கு மரணம் சம்பவித்துவிடுகிறது. அம்மாவுக்கு நான் வேண்டாமா? அவ்வளோதானா.. கௌதம் வெறும் நடைபிணமா... திவ்யாவுடன் பேசுவதும் குறைந்தது. 
"ஏன் சரியா பேசுறதில்ல நீங்க?"
"..... ஒண்ணுமில்ல...."
"இல்ல, என்ன ஆச்சு மா?"
"அம்மா பேசறதில்ல..."
"என்ன ஆச்சு?" அதிர்ந்தவளாய் கேட்டாள்.
"நான் வேண்டாமாம்... என்னை தூக்கி எறிஞ்சுட்டாங்களாம்... நான் இல்லாம வாழப்பழகிக்கரங்களாம்.."
"வீட்டுக்கு போயிட்டு வாங்க.. எல்லாம் சரியாயிடும்"
"இல்ல திவ்யா... போகணும், எனக்கு என் வாழ்க்கையை தேர்ந்தெடுக்குற உரிமைகூடவா இல்ல... நான் என்ன தப்பு பன்னினேன்? நான் என்னைவிட அவங்க மேல ரொம்ப நம்பிக்கை வெச்சிருந்தேன், என்னைப் புரிஞ்சு நம்ம காதல ஏத்துக்குவாங்கன்னு.."
"......."
"எவ்வளவோ தத்துவங்கள் பேசுறாங்க ஆனா நடைமுறைக்கு வர்ரப்போ எந்த தத்துவமும் எடுபடறதில்ல.. நானென்ன பொம்மையா? இவங்க சொன்ன மாதிரியே உட்காரணும்னு. எனக்கும் எல்லாம் இருக்கு, சரி விடு எனக்கு ஒன்னும் சொல்ல தோணல... ஒரே ப்ளாங்கா இருக்கு..."
"நான் ஒன்னு கேட்டா கோவிச்சுக்க கூடாது"
"சொல்லு"
"இல்ல, என் மேல கோவம் வரலியா? என்னால தான் இதுனு...."
"இல்ல... இது நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து எடுத்த முடிவு, ஒண்ணா வாழானும்னு... நீயும் உங்க வீட்ல இத சொல்லி ரொம்ப கஷ்டப்படுற! இதுக்கு உன்ன மட்டும் எப்பிடி பொறுப்பாக்க முடியும், அது ரொம்ப தப்பு. யார் மேலயும் தப்பு இல்ல. அவங்களுக்கு அவங்க சொல்றபடி அவங்க பையன் கேக்கணும், நமக்கு நம்ம விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கணும். யாரையும் தப்பு சொல்றதுக்கில்ல திவ்யா..."
"........."
"விடு நான் அப்புறமா பேசுறேன். என்னக்கு கொஞ்சம் தனியா இருக்கணும்." என்று போனை வைத்தான் கௌதம். என் தரப்பு நியாயங்கள், கூச்சம் என வீட்டிற்கும் செல்ல ஒரு தயக்கம். 
இந்தத் தனிமை சில வாரங்களிலிருந்து பல மாதங்களாகிவிட்டன.... சௌந்தர்

Thursday, November 17, 2016

இறை வெண்பா!!!


உணர்விலே யொன்றிய உள்ஞான போதமாய் 
என்னுயிராய் நின்றபொரு ளே 


கனலாய்யென் னுள்ளே கனன்ற பெருவொளியே 
தண்ணளியே தத்து வமே 

ஒப்பாரும் மிக்காரும் எக்காலும் போற்றிடுமொப் 
பற்றப்ப ரமேந லமே  - சௌந்தர் 


பொருள்:

1. என் உணர்வினில் உட்கலந்த ஞானமாய், என்னுள் இருக்கும் பொருள். ஞானம் என்பது இறைவன், அந்த ஞானம் நம்முள்ளே இருக்கிறது. அந்த ஞான வடிவினன் இறைவன். போதம் என்றால் ஞான  மயக்க நிலை.
2. இந்த உயிர் உடலில் தங்க, வெப்பம் வேண்டும். இறைவன் ஞான வெப்பமாக, பேரொளியாக நம்முள் கனன்று கொண்டிருப்பவன். தண்ணளி - கருணை. கருணை மிக்கவன். தத்துவ வடிவானவன்.
3. தாழ்ந்தவர் இருந்து உயர்ந்தவர் வரை என்றும் போற்றும் இயல்புடையவன். ஒப்பற்ற பரம்பொருள். நம் வாழ்வின் நலமானவன். 

சேர்வதெப்போது!!!

என் பார்வை 
முன்னிலும் 
விரிந்திருக்கிறது!!!

என்னுள் 
உள்ளொளி பெருகுகின்றது!!!

என் பாதையினைப் பற்றி 
பெரிதும் எனக்கு தெரியாது...
தெரியவும் விரும்பவில்லை!!!

அங்கே 
நான்
இரு காலடித்தடங்களைக் காணுகிறேன்!!!

என் தலைக்குமேல் 
நிலவின் வெளிச்சமும்...
காலின் கீழ் 
நிழலின் இருளும் சூழ 
நடைபயில்கிறேன்!!!

காற்றினில் தலையசைக்கும் 
இலைகளுடன் -
நானும் தலையசைக்கிறேன் - அந்த 
தென்றலின் இசைவுக்கு!!!

என் பார்வைகள் 
எனதாக இருக்கலாம் - ஆனால் 
அதன் ஒளியாக...

பாதை எனதுதான் - அனால் 
அதில் பதிந்த 
பாதங்கள்....

என் பயணத்தில் பதிந்த 
காலடித்தடங்களில் 
ஒன்று...

இருள் சூழ்ந்த 
வழியதனில்
வெளிச்சம் வாரி இரைக்கும் 
தண் நிலவாக இருப்பது...

என்னை ஓர் 
இலையாய் இசையவைக்கும் 
தென்றல்....

இன்னும் புரியவில்லையா??!!
அந்த மழைத்துளி 
என்று
இந்த மண்ணோடு சேரும்!!!

வானையும் கடலையும் 
இணைக்கும் 
காலைக்கதிரவன் போல 
நம் வாழ்வில் 
என்று அந்த 
காலக்கதிரவன் உதிப்பது!!! - சௌந்தர்