Showing posts with label ஆசிரிய விருத்தம். Show all posts
Showing posts with label ஆசிரிய விருத்தம். Show all posts

Wednesday, November 16, 2016

மனதினைக் கொன்ற மனிதர்காள்!!! - அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்



மனதைக் கொன்ற மனிதர்காள் நீவிர் வாழ்ந்தென் நிலைக்கண்டீர் 
தினமும் கணமும் நின்னையேநீ விர்தாம் நினைந்தே வாழ்வீரோ 
தன்னை முன்னின் றிருத்தியேநா ளும்நா ளும்வா ழும்வாழ்வே 
தென்னைமீ திடியாய் ஒருநாள்தான் தெறித்து வீழும் தானறிவீர்  - சௌந்தர்   

கவிதை செய்வேன் கேளீர் - ஆசிரிய விருத்தம்!!!


எண்ணம் என்னும் ஊரினிலே எழுத்து என்னும் தேரினிலே 
வண்ண வண்ண நிறம்காட்டி வான வில்லின் கரம்போல  
அள்ளி அள்ளி சொல்லெடுத்து அழகாய் தமிழில் அதைசேர்த்து 
சின்னச் சின்னக் கவிதைகளை சேர்த்து வைத்து எழுதுகிறேன்

தெள்ளத் தெளிய தமிழமுதை தேர்ந்து தெளிந்த கருத்ததனை 
உள்ளம் கடக்கும் சொற்கொண்டு உணர்வு பூக்கும் பொருள்கொண்டு 
சொல்லச் சொல்லச் சொக்கவைக்கும் கவிதை என்னும் காவிரியில் 
வெள்ளம் வெள்ளம் எனும்போல அள்ளும் கவிதை அதைப்பாராய்  

கன்னல் மொழியாம் தீந்தமிழே கருதக் கருதக் கவிபெருகும் 
மின்னல் ஒளிபோல் ஒருகவிதை மிகவும் விரைவாய் உருவாகும்  
பின்னல் சடையாய் சொற்களெல்லாம் அருகே வந்தே அசைந்தாடும் 
முன்னம் என்னுள் எழுந்தபொருள் முழுதாய் இங்கே அரங்கேறும்  - சௌந்தர்